Friday, 17 July 2020

பிடவூர் ஐய்யனார்

பிடவூர் ஐய்யனார்:

தமிழ்மக்களின் தொன்றுதொட்ட தெய்வம் சாத்தன், இவரை சாஸ்தா, ஐய்யனார் ஐயன் என பல பெயரில் அழைப்பதுண்டு. பல ஊர்களில் இவர் நீர்த்துறைகளில் காணப்படுவார். ஆனால் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் மட்டுமே தனியாய் கற்றளி எழுப்பி வணங்கும் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறெங்கும் இப்படி தனிப்பெருந்தெய்வமாய் கற்றளியில் இருப்பதில்லை. அதுவும் இக்கோவில் சோழர் காலத்து கற்றளி. இன்றைய திருப்பட்டூரே அன்று பிடவூர் என அழைக்கப்பட்டது. இதனை அக்கோவில் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். "புவனமுழுதுடைய வளநாட்டு திருப்பிடவூர் நாட்டு தேவதானம்" என்று பயின்று வருவதிலிருந்து இன்றைய திருப்பட்டூரே, பிடவூர் என உறுதியாய் கூலாம்.

பிடவூர் பற்றி சங்க இலக்கிய குறிப்புகள்:

புறநானூற்றின் 95ம் பாடலில்,

"செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிணேயேம் பெரும"

என பாட்டுடைத்தலைவனாய் சாத்தனார் என்பவரை கூறுகிறார். சோழநாட்டு பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவராவார். அப்பாட்டுடைத் தலைவனே தற்போது திருபட்டூரில் கோவில் கொண்டிருக்கும் சாத்தன் என டாக்டர்.உ.வே.சா கருதுகிறார்.
சாத்தனுக்கு கோவில் கட்டி வணங்கும் வழக்கம் இருந்தது, பெரியபுராணத்தின் 'வெள்ளானை சருக்கம்' வாயிலாய் அறியலாம். சிவபெருமான் திருஉலாவை மாசாத்தனார் கேட்டு, திருப்பிடவூரில் வெளிப்படுத்தினார் 52 ம் பாடல் கூறுகிறது. சுந்தரர் காலத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் முன்பு வாழ்ந்த மனிதர் 'பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன்' சுந்தரர் காலத்தில் அவர் தெய்வமாக்கப்பட்டிருக்கலாம். 

ஐய்யனார் தமிழகத்தின் தனிப்பெரும் நெறியாய் இருந்திருந்து, பின் இவரை வணங்கும் மக்களை தம்முள் இழுக்க சமணமும், பௌத்தமும், வைதீகமும் தத்தம் புராணத்திற்குள் இழுத்திருக்குமோ? என்றும் யோசிக்க வேண்டியுள்ளது(🏃🏃🏃🏃🏃)



No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி  : விநாயகர் தமிழ்க்கடவுளா? ஆரியக்கடவுளா? என்ற விவாதம் தாண்டி, இந்திய அளவில் விநாயகரின் முதல் உருவவழிபாடு நம் தமிழகத்தி...

Other posts in this topic