முருகனும் வேலனும்:
நம்ம ஊர் முருகனைப்போலவே உள்ள தெய்வம் உலகமெங்கும் வழிபாட்டில் உள்ளது விந்தையான ஒன்று. நம் தமிழகத்தில் சங்கஇலக்கியத்தில் உள்ள முருகன் ஒருவராகவும், சங்கஇலக்கியத்தில் காலத்தால் பிற்ப்பட்ட பரிபாடலில் உள்ள முருகன் ஒருவராகவும், வேறுபடுவதை அறியலாம். தமிழகத்தில் முருகனுக்கு சுப்ரமணியன், வேலவன், குமரன்,ஆறுமுகன், என பலபெயர்கள் உண்டு. தமிழகத்தின் இருபெரும் வைதீக மதங்களான சைவமும், வைணவமும் முறையே "சிவக்குமரன்", "மால்மருகன்" என தம் கடவுளரிடையே முருகக்கடவுளை தொடர்புபடுத்தி கூறுகின்றன. இதிலிருந்து இவர் செல்வாக்கினை அறியலாம். இளமை இவரது குணமாகவும், நோயினை நோக்குபவராகவும், மயிலை ஊர்தியாகவும், சேவல்கொடியும், பாம்பு இலச்சினையும் இவர் அடையாளமாய் அறியப்படுகிறது.
"பாக்குஸ் டாயானிஸாஸ்" என்ற கிரேக்க தெய்வத்திற்கும் "ஸ்கந்தன்" என்ற வடஇந்திய கடவுளுக்கும் "பாக்குஸ்" என்ற ரிக்வேதகால கடவுளுக்கும் இக்கடவுளர்களுடன் தொடர்புபடுத்தப்படும் நமது முருகக்கடவுளுக்கும் உள்ள ஒற்றுமைகளை அடுத்த பதிவுகளில் காண்போம்.
புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்ற நூல்களில் காணப்படும் முருகன் குறித்த தரவுகள் மிகப்பழையது, ஆனால் பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கியங்களில் வரும் தரவுகள் இராமாயணம், மகாபாரதத்தில் வரும் முருகக்கடவுளில் உருவகத்தோடு ஒத்துவருகிறது.மகாபாரதத்தின் வனபர்வா, சல்யபர்வா, அனுசாசனபர்வா ஆகிய மூன்று பகுதிகளில் ஸ்கந்தனுடைய கதைகள் கூறப்பட்டுள்ளன.
பகவத்கீதையில் கிருஷ்ணர் "ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த"என்று அருளியுள்ளார்.
பழந்தமிழகத்தில் முருகு, முருகன் என்ற இரு பெயர்களில் முருகர் வணங்கப்பட்டதை அறியமுடிகிறது. வேலன் என்பவர் முருகனின் பூசாரியாவார். மலையாளத்தில் இவரை வெளிச்சப்பாடு என்பர்.
"முருகமர்ந்து வந்த முதுவாய் வேல"
என குறுந்தொகையின் ஒரு பாடல் கூறுகிறது.அதாவது முருகன் என்ற தெய்வம் உள்ளே வர வெறியாடி வந்த வேலனே என்பது இதன் பொருள்.
தற்போது கூட நிறைய கிராமங்களில் இளம்பெண்களை பொழுதுமங்கிய வேலையான இருள் சூழ்ந்ந வேளைகளில் செல்ல வேண்டாம், பேய் பிடித்துவிடும் அல்லது முனிஅடித்துவிடும் என கூறுவதுண்டு. மேலும் சில பெண்களுக்கு பேய்பிடித்து(?)விட்டால் பூசாரியிடம் அழைத்து சென்று அப்பேயினை விரட்டிவிடுவதும் உண்டு. இதனையே அன்று சங்க இலக்கியமும் கூறுகிறது. காதல்நோய் பட்டபெண் பித்துபிடித்தார் போல இருக்கையில் அவளின் தாயும், தோழியும் வேலனிடம் அழைத்துசென்று ஆடறுத்து, அந்த இரத்தத்தை மேடையில் கிடத்தி அதன் மேல் வேலனை ஆடவைப்பர். அப்பொழுது அவனுள்ளே இறங்கும் கடவுளை "முருகு" என்கிறது இலக்கியம்.
முருகனை இன்று நாம் வணங்கும் கருப்பு, ஐயனாரை போல் மந்தையிலும், ஊர் எல்லையிலும் வைத்து உயிர்ப்பலியிட்டு வழிபட்டதே பெருவழக்காயிருந்தது. ஆயினும் ஒருசில இடங்களில் முருககோட்டம் (கோவில்) இருந்ததை புறநானூறு கூறுகிறது.
முருகனுக்கு வள்ளிமட்டுமே மனைவியாய் இருந்ததை பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து அறியலாம்.(முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல-நற்றிணை) பிற்காலத்திலேயே தெய்வானையும் இணைக்கப்படுகிறார்.
இவ்வாறு எளிய முறையில் குறிஞ்சிசார்ந்த திணையில் இருந்த முருகக்கடவுள், இன்றைய One india Scheme போல. இவரும் ஸ்கந்தன், கார்த்திகேயன் ஜோதியில் கலந்துவிடுகிறார்.
முருகன்-ஸ்கந்தன் தொடர்பை அடுத்த பதிவில் காண்போம்.

No comments:
Post a Comment