Tuesday, 30 August 2022

விநாயகர் சதுர்த்தி

 விநாயகர் சதுர்த்தி 

:


விநாயகர் தமிழ்க்கடவுளா? ஆரியக்கடவுளா? என்ற விவாதம் தாண்டி, இந்திய அளவில் விநாயகரின் முதல் உருவவழிபாடு நம் தமிழகத்திலிருந்தே தொடக்கமாகிறது. ஆகமங்களுக்குள் அடங்காத கடவுளாய், எளிமையான உருவாய், சாதாரண மணலிலும், மஞ்சளிலும் பிடித்து வழிபாடு செய்யப்படும், முழுமுதற்கடவுளராய் வணங்கதகுதிபெற்ற கடவுள் விநாயகர்.


அனைவருக்கும் விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துகள்


#ஆற்றுப்படை #ancestors #தமிழன் #historic #ancestral #Aatrupadai #vinayagarchathurthi #vinayagar #vinayaka #vinayagarchathurthi2022 #விநாயகர் #பிள்ளையார் #பிள்ளையார்பட்டி













Monday, 12 April 2021

பரிபாடல் கால முருகன்

 பரிபாடல் கால முருகன்:


பரிபாடலுக்கு சிற்றெல்லை 25 அடியென்றும், பேரெல்லை 400 அடியென்றும் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் நமக்கு இன்று கிடைத்ததோ சிற்றெல்லை 32 அடியும், பேரெல்லை 140 அடியுமே, ஏனைய இழந்த பாடல்கள் எவ்வளவு தகவல் அளித்திருக்குமோ தெரியவில்லை.      


இது தொகுக்கப்பட்ட காலத்தில் 70 பாடல்களை உடையது என்பதை கீழ்க்கண்ட பாடல் தெரிவிக்கிறது.      


“திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்

தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய

வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்"


மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும் செழுமையும் தந்த வைகை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும்  மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது பரிபாடல்.

பரிபாடலில் முருகவழிபாடு பழங்குடியினர் மரபுவழிபாடும், வடஇந்திய ஸ்கந்தவழிபாடும் இணைந்த ஒரு கலவையாய் இருப்பதை நன்கு அறியலாம். எளிதாக சொல்லவேண்டுமானால், இன்றைய குலசேகரபட்டினம் சொர்ணமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் நாட்டார் தெய்வ வழிபாட்டினை கூறலாம். இந்த இருதெய்வமும் சிவபார்வதியின் அம்சமாய் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தலபுராணம் கூறுகிறது. தமிழகத்தில் பிறசிவன்கோவில்களை போல இங்கே ஆகமவிதிகளின்றி எளிய கட்டுமானத்தில் இத்தெய்வங்கள் உள்ளது. கிடாவெட்டு, வேடம்கட்டுதல், முளைப்பாரி, இன்னும் பல Tribal ritual இந்த கோவிலில் காணலாம். இந்த நிகழ்வையெல்லாம் தமிழக சிவாயங்கள் எங்கிலும் காண இயலாது. இதேபோன்ற ஒருமரபுதான் திரௌபதை-அரவான் கதையிலும், தொண்டைமண்டல 

கொற்றவை -அரிகண்ட வீரன் மரபே வில்லிபாரதம் உட்புகுதலுக்குபின் திரௌபதை வழிபாடாய் மாற்றம் கண்டது.


குறிஞ்சிமக்கள் வழிபாடு:


முருகனுக்குரிய மரமாய் கடம்பமரம் போற்றப்பட்டு அம்மரத்தினை சுற்றி குரவைகூத்து ஆடி, தொண்டகப்பறை போன்ற இன்னிசையெழுப்பி முருகனை வணங்கினர். மலைதெய்வமே முருகன் என்ற கருத்திற்கேற்ப குறவரின் வேட்டைகருவியான வேலும், குறிஞ்சிநிலத்தில் வாழும் வேளமும், மயிலும் முருகனுக்கு உரியவையாய் மாற்றப்பட்டது.


பரிபாடலில் முருகனுக்கு ஆறுமுகங்களும், பன்னிருகைகளும், காட்டப்படுகிது. மனிதஆற்றலைவிட உயர்ந்த ஆற்றல்கொண்டவர் என்பதனை உருவகப்படுத்த இவ்வாறு செய்துள்ளனர். பன்னிரு கைகளிலும் வெள்ளாட்டுமறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடரி, கணிச்சி, மழுப்படை, மாலை, மண் உள்ளது எனவும் பரிபாடல் கூறுகிறது.


மாமரவடிவில் கடலில் ஒளிந்த போர் செய்த சூரனை, வேரோடு அழித்து வதம் செய்தான் முருகன் என பரிபாடலில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.


இந்த புராணத்தின் தத்துவத்தை மானுடவியலாரின் பார்வையில் அடுத்து காண்போம்.




Thursday, 8 April 2021

முருக வணக்கம்

 முருக வணக்கம்:

பரிபாடலுக்கு முன் உள்ள சங்க இலக்கியத்தில் முருகனை குறிக்க தாயின் பெயரினையே அடையாளம் காட்டியுள்ளனர், "பழையோள் சிறுவ", "கொற்றவை செல்வன்" என்ற பெயரிலிருந்து இது நன்கு விளங்கம். இதே காலகட்டத்திற்கு சிறிதுமுன்பு வடஇந்தியாவில் அக்கினியின் முக்கியத்துவம் குறைந்து, ருத்திரனின் முக்கியத்துவம் அதிகரித்தது, உபநிடத காலத்திற்கு பின்உள்ள புராணங்கள் அக்கினியின் புதல்வனான ஸ்கந்தனை ருத்ரனின் புதல்வனாய் அடையாளபடுத்தினர், வேதகாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல ருத்ரர்கள், பிற்காலத்தில் சிவனின் ஒரு கூறாய் ருத்ரன் பாவிக்கப்பட்டு ஈசனின் மகனாய் ஸ்கந்தன் ஆக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் நம் தமிழகத்திலும் வடக்கத்திய தொடர்பின் காரணமாய் இத்தகைய புராணங்கள் பரவ ஆரம்பித்தது. பரிபாடல் கால முருகவழிபாடு களவு புணர்ச்சியின் காவல் தெய்வமாகவும் இருந்தார். மகளிர் தம் காதல் கைகூட வணங்கிய குறிப்புகள் பரிபாடலில் உண்டு. குறிஞ்சித்திணையில் களவுபுணர்ச்சியும், திருமணமும் ஒருங்கே இருந்தது. எனவே குறிஞ்சித்திணையின் செவ்வேளான முருகன் களவுப்புணர்ச்சியில் வள்ளியை மணந்து கொண்டார். ஸ்கந்தர் புராணம் இணைக்கப்படுகையில் கற்புமணம் புரிந்த தேவசேனை இணைக்கப்படுகிறாள். எனவே காதலுக்கு வள்ளியும், கற்புமணம் சிறப்பாய் ஒரு கருத்தாக்கம் கொண்ட பரிபாடல் காலத்தில் தெய்வானையும் இணைக்கப்படுகிறார்.


வேலன் முருகனை வழிபாடுசெய்தது:


"தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,

ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ,

விடை அரை அசைத்த, வேலன்,கடிமரம்

பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,

விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து 

கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ

மாலை மாலை, அடி உறை, இயைநர்,

மேலோர் உறையுளும் வேண்டுநர் யார்"


அழகிய வடிவேலுக்கு மலரும், குழையும், துணியும் சார்த்தி வேலன் சுமந்து வருகிறான். அதன்மீது சாந்தமும், மணமும் பூசியிருக்க, கடம்ப மரத்தின் அடிப்பகுதியில் ஒரு ஆடு கட்டியிருக்க, தீவர்த்திகள் எரிய, உணவும், மதுவும் படைக்கப்பட்டு, இவ்வழிபாட்டின் இன்பத்தை பெறுவோர் சுவர்க்கம் பேண வேண்டும் என ஆசைகொள்வாரோ? என கேட்கிறது பரிபாடல். இம்மக்கள் வீடுபேற்றையும், சுவர்க்த்தினையும் குறித்து பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை, வேலன் எனும் பூசாரி நடத்தும் வெறியாட்டு நிகழ்விலேயே இவர்கள் திருப்தி அடைகிறார்கள் என போகிறபோக்கில் சொல்கிறது இப்பாடல். இது ஒரு Tribal worship ஆகும்.இன்றைய கிராமங்களில் நாம் நமது கருப்பு, சுடலை, வேடியப்பன்களுக்கு கொடுக்கும் கொடை போன்றே இந்நிகழ்வும் ஏறக்குறைய உள்ளது.


பரிபாடலில் வரும் ஏறக்குறைய புராணமயமாக்கப்பட்ட முருகரை அடுத்து காண்போம்.



Wednesday, 7 April 2021

பாக்குஸ் டயனிஸாஸீம் ஸ்கந்தனும்

 பாக்குஸ் டயனிஸாஸீம் ஸ்கந்தனும்:

வேதகால ஸ்கந்தன் பலதெய்வங்களின் தன்மையை கொண்டுள்ளதை போன்றே, கிரேக்க தெய்வமான பாக்குஸ் டயனிஸாஸூம் பல வகைகளில் ஸ்கந்தனுடன் ஒற்றுபோகிறார்.

*ஸ்கந்தன் களிப்புகளின் உருவம்,  டயனிஸாஸூம் ஒயின் எனும் மதுவோடு தொடர்புடையவர்.

*கிரேக்க அக்கினிகடவுளுக்கு பிறந்தவர் டயனிஸாஸ், ஸ்கந்தனும் அவ்வாறே பிறந்தவர்.

*டயனிஸாஸ் "சோம்லே" எனும் பொய்கையிலும், ஸ்கந்தன் "சரவணம்" எனும் ஹேமாலய  பொய்கையில் வளர்ந்தவர்கள்.

கிரேக்கர்களது மது மற்றும் களிப்பின் கடவுளான பாக்குஸ் டயானிஸாஸ் போலவே ஸ்கந்தனுக்கும் பல தன்மைகள் இருப்பதை ஆராவமுதன் எனும் அறிஞர் சுட்டிக்காட்டி நீண்டதொரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளார்.

தொல்லியல் பார்வையில் ஸ்கந்தன்:

உஜ்ஜயினில் கி.மு 100 -கி.பி 100 ற்கு இடைப்பட்ட ஸ்கந்த உருவம் கொண்ட காசுகள் கிடைத்தது. இதில் "ஸ்கந்த" எனும் எழுத்துப்பொறிப்போடு சேவல்கொடியு, மயில் உருவமும் அதில் இருந்தது. வேறொரு குஷாண மரபினர் வெளியிட்ட காசில் ஸ்கந்தனும், விசாகனும் ஒருவரையொருவர் நோக்குமாறு காசும் கிடைத்தது. யுத்தத்தையே முதன்மை தொழிலாக கொண்ட யௌதேயர் எனும் மரபினர், ஆறுதலைகள் இருகரங்கள் கொண்ட கார்த்திகேயனின் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய பதிவில் அக்னியின் புதல்வனாக வேதகாலத்தின் பிற்பகுதியில் கூறப்பட்ட ஸ்கந்தன், அதன்பிறகுள்ள காலங்களில் அக்னியை விடுத்து ருத்ரனின் புதல்வனாய் மெல்ல மெல்ல புகுத்தப்படுகிறார். இவ்வளர்ச்சி நிலையின் அடுத்தபடியாக, இக்கதைகள் வடதமிழகத்தில் மெல்ல, மெல்ல பரவ ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரணமாய் வணிகம் சார்ந்த குடிகள் இருந்துள்ளதாய் கருதப்படுகிறது, வடநாட்டுமக்களுடன் நம்மக்கள் வணிகத்தொடர்பு கொண்டதனை அகநானூற்றில் காணலாம்.நந்தர்கள் வடநாட்டில் பாடலிபுத்திரத்தை ஆண்டு வந்தபோது பகைவர் தமது நாட்டைக் கைப்பற்றி விடுவார்கள் என்று எண்ணித் தம்மிடமுள்ள விலை மதிப்பறியாச் செல்வங்களைப் பாதுகாக்க, அவற்றைப் பேழை ஒன்றில் வைத்து அதைக் கங்கை ஆற்றின் அடியில் புதைத்து மறைத்து வைத்த வரலாற்று நிகழ்ச்சியைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றது.

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் 

சீர்மிகு பாடலிக் குழீஇ கங்கை 

நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ"

இதிலிருந்து நம் தமிழர்கள் வடஇந்தியரோடு தொடர்புகொண்டமை நன்கு புலப்படும். இனக்குழு சிறுதெய்வங்களில் ஒருவராய் இருந்த முருக-வேலன் வழிபாடு, பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாடாகி மாறிப்போனது. காளிதாஸரின் குமாரசம்பவ கதைகள் பல்லவர்காலத்தில் ஆதரிக்கப்பட்டு உள்நாட்டில் உள்ள பண்பாட்டோடு கலந்து, புதுவிதகருத்தாக்கத்தோடு பரவிய்து.

இதனை வரும் பகுதியினில் காண்போம்.








Tuesday, 6 April 2021

சாதுசூரனும் ஸ்கந்தனும்

 சாதுசூரனும் ஸ்கந்தனும்:


வடஇந்தியாவில் பயின்றுவரும் ஸ்கந்தன் குறித்த சில தரவுகளை காண்போம். வேதத்தில் பிரபலமான தெய்வம் அக்னி, வேதகாலத்திற்கும், உபநிஷத காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சண்முகம் என்ற கடவுளை கூறுகிறது. இவரை தேவர்கள் சேனையின் தலைவன் என்ற பொருளில் "தேவசேனாபதி" என அழைக்கப்படுகிறார். ஸ்கந்தனை பற்றி அறியும் முன் வேத-உபநிடத காலம் குறித்து சிறிது அறிவோம். 


வேதகாலம் ஏறக்குறைய இன்றைக்கு 3500

ஆண்டுகட்கு முற்பட்டது என்கின்றனர் வடஇந்திய ஆய்வாளர்கள்.

இவ்வேதங்களை மனிதர்கள் ஆக்கவில்லை என்பதும், மானிடத்திற்கு

அப்பாற்பட்ட இறைவனால் ஆக்கப் பெற்றவை என்பதும் இவர்கள் கருத்து,  இவ்வேதங்கள் ரிக், யசுர், சாமம், அதர்வணம்

என்ற நான்காய் சுட்டப்படுகிறது. (இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளது நான்குவேதங்களில் அதர்வணம் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என கூறுபவரும் உலர்)

வேதத்தின் இறுதிப்பகுதியாக உபநிடதங்கள் விளங்குகிறது.

உபநிடதம் என்ற சொல்

ஆர்வத்தோடு அருகிருந்து கேட்டல் என்ற பொருளைத் தரும்.

ஆதலால் ஆசிரியர் சீடனுக்கு உபதேசித்தல் முறையில்

உபநிடதங்கள்     அமைந்தன.     இத்தகைய     உபநிடதங்கள்

இருநூற்றுக்கும் மேற்பட்டவை என்று கூறுவர். குறிப்பிட்ட சில

உபநிடதங்களே தத்துவ ஞானத்திற்கு உட்பட்டவை ஆகும்.

 வேதங்கள் பல்வேறு வேள்விகளை ஆதரித்தன. ஆனால்

உபநிடதங்கள்வேள்விகளை ஏற்காது ஏளனம் செய்தன. இந்த

நிலையில் இந்தியத் தத்துவஞானம் வெகுகாலம் வரை வேத -

உபநிடதங்கள் அளவிலேயே ஆட்பட்டிருந்தது. வேதத்தில்

கூறப்பெற்ற பலதெய்வ வழிபாட்டு முறை மாறி - உபநிடத

காலத்தில் பிரம்மம் என்ற முழுமை நிறைந்த தத்துவ மூலப் பொருள்

வழிபாட்டிற்கு உரியதாக அமைந்தது. உபநிடதங்கள் பல்வேறு

கோணத்தில் பலரால் ஆக்கப் பெற்றமையால் - அவைகளுக்கு

இடையே இருந்த முரண்பாடுகளை அகற்றப் பிரம்மசூத்திரம் எழுந்தது. இதற்கும் பலர் உரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதினர்.

வேத-உபநிடத இடைகாலத்தில் ருத்ரன், நந்தி, தந்தி, கருடன், பிரம்மன்,நரசிம்மன், அக்கினி, துர்க்கை, ஆதித்தன் போன்ற தெய்வங்களுடன் ஸ்கந்தனும் வருகிறார். சந்த்யோக உபநிஷதத்தில் சனத்குமாரன், நாரதரிடம் சண்முக கதையை சொல்லும்போது ஸ்கந்தனும், சண்முகனும் ஒன்றே என கூறுகிறார். சந்த்யோக உபநிஷதம் புத்தர் காலத்திற்கும் முந்தையது.

இராமாயண மகாபாரத கால ஸ்கந்தன்:

இராமயணத்தில் அசுரர்களை அழிக்க தேவர்களும், ரிஷிகளும் பிரம்மனிடம் சென்று தமக்கு ஒரு சேனாபதி வேண்டுமென கேட்க, பிரம்மன் அவர்களை அக்னியிடம் அனுப்பினார். கங்கையும், அக்னியும் இணைந்து ஒரு மகனைபெற்று தருவதாய் கூறினார். கங்கைமீது அக்னி தன் வித்தை செலுத்த அக்னியின்ஜீவாலை தாங்காமல் கங்கை திகைக்க,  அந்த வித்துகள் இமாலய அடிவாரத்தில் வைக்கப்பட்டது. அவ்வித்து தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் என்ற உலோகங்களாய் மாறிற்று, இவ்வுலோகங்கள்ஒன்று சேர குமரன் பிறந்தான். ரிஷிகள் இவனை வளர்க்க கிருத்திகை தேவியரை அமர்த்தினர். இச்செய்தி மிதிலை செல்லும் வழியில் ராமன் இலட்சுமணனுக்கு கூறுகிறார்.

மகாபாரதத்தில் ஸ்கந்தன் கதை வனபர்வதம் 223-232 அத்தியாயம் வரையிலும் காணப்படுகிறது,  சேனை தானவர் எனும்  அசுரனிடம் தோற்ற இந்திரன், தன்னை காப்பாற்ற ஒரு மாவீரனை தேடி அழைந்தார். அச்சமயம் கேசி எனும் ஒரு அசுரன் பிரஜாபதியின் மகள் தேவசேனையை பிடித்து துன்புறுத்தினான். அதைகண்டு வெகுண்ட இந்திரன் அந்த அசுரனை போரிட்டு வென்றார். தன்னை காப்பாற்றியதால் தனக்கு தந்தை ஸ்தானத்தில் இந்திரன் இருக்குமாறு வேண்டி, தனக்கொரு மணமகனை பார்த்து மணமுடித்து வைக்க வேண்டினாள். இந்திரனும் பிரம்மனிடம் சென்று சாதுசூரன்(சுத்தவீரன்) ஒருவனை படைக்க வேண்டினார். பிரம்மனும் அவ்வாறே வரம் அளித்தார். இச்சமயம் சப்தரிஷிகள் பூமியில் யாகம் நடத்தினர், அந்தயாகத்திற்கு இந்திரனும் சென்றார். அங்கு அக்னியும் சென்றார், ரிஷிபத்தினிகள் எழுவர் மேலும் இச்சை கொண்டார், இதனை அறிந்த ரிஷிமனைவிகள் அக்கினியின் மோகத்தை ஏற்காது வெறுப்புற்றனர்.  அவமானத்தால் தற்கொலை செய்ய வனத்தை அடைந்தார் அக்கினி. அங்கு சுவாஹா எனும் பெண் அக்கினியின் மேல் மோகம் கொண்டு, அக்கினியின் கதையை கேட்டறிந்தாள், ரிஷிபத்தினிகள் உங்கள்மேல் மோகம் கொண்டுள்ளார்கள், அவர்களை ஒவ்வொரு நாளிற்கு ஒவ்வொருவராய் அனுப்பி வைக்கிறேன் என கூறி, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பத்தினியின் உருகொண்டு அக்கினிக்கு இன்பமளித்தாள். ஆனால் அருந்ததியின் கற்பின் வலிமையால் அவ்வுருவை ஏற்கமுடியாமல், அக்கியின் வித்தை சரவணபொய்கையில் கொண்டு சேர்த்தாள். அவ்வித்துக்கள் ஒன்று திரண்டு குழந்தையாயிற்று, சக்தியை ஒருகையிலும் மறுகையில் சேவலையும் கொண்டது. அக்குழந்தை சங்கு எடுத்து ஊதி பெரும் பிரச்சனை செய்தது. இதனால் தேவலோகம் அதிர, அக்குழந்தையை கொல்ல சப்தமாதர்களை தேவலோகம் ஏற்பாடு செய்ய, அக்னியால் அது தடுக்கப்பட்டது. அக்குழந்தைக்கு குழந்தைதன்மை கொடுக்க அக்னியே மூன்று குழந்தையாய் மாறினார். இதன்பின்னும் அக்குழந்தையின் அட்டகாசம் தொடர, அதனை எதிர்த்து இந்திரன் போர்புரிய சென்றார். இந்திரன் தோல்வியடையும் தருவாயில் தனது வச்சிராயுதத்தை ஸ்கந்தன் மேல் பாய்ச்சினார். அப்போது சக்தியின் உருவமாய் விசாகன் தோன்றினார். தன் தவறையுணர்ந்த இந்திரன், ஸ்கந்தனுடன் சமாதனமடைந்து, தம் வளர்ப்புமகளை மணமுடித்து வைத்தார்.

இதுதவிர இரு புராணகதைகளும் உண்டு. ஸ்கந்தனின் தன்மை மற்றும் சில கருத்துகளையும் அடுத்த பகுதியில் காண்போம்.

கீழே புகைப்படத்தில் ஸ்கந்தனும், அக்கினியும்




Monday, 5 April 2021

முருகனும் வேலனும்


 முருகனும் வேலனும்:

நம்ம ஊர் முருகனைப்போலவே உள்ள தெய்வம் உலகமெங்கும் வழிபாட்டில் உள்ளது விந்தையான ஒன்று. நம் தமிழகத்தில் சங்கஇலக்கியத்தில் உள்ள முருகன் ஒருவராகவும், சங்கஇலக்கியத்தில் காலத்தால் பிற்ப்பட்ட பரிபாடலில் உள்ள முருகன் ஒருவராகவும், வேறுபடுவதை அறியலாம். தமிழகத்தில் முருகனுக்கு சுப்ரமணியன், வேலவன், குமரன்,ஆறுமுகன், என பலபெயர்கள் உண்டு. தமிழகத்தின் இருபெரும் வைதீக மதங்களான சைவமும், வைணவமும் முறையே "சிவக்குமரன்", "மால்மருகன்" என தம் கடவுளரிடையே முருகக்கடவுளை தொடர்புபடுத்தி கூறுகின்றன. இதிலிருந்து இவர் செல்வாக்கினை அறியலாம். இளமை இவரது குணமாகவும், நோயினை நோக்குபவராகவும், மயிலை ஊர்தியாகவும், சேவல்கொடியும், பாம்பு இலச்சினையும் இவர் அடையாளமாய் அறியப்படுகிறது.

"பாக்குஸ் டாயானிஸாஸ்" என்ற கிரேக்க தெய்வத்திற்கும் "ஸ்கந்தன்" என்ற வடஇந்திய கடவுளுக்கும் "பாக்குஸ்" என்ற ரிக்வேதகால கடவுளுக்கும் இக்கடவுளர்களுடன் தொடர்புபடுத்தப்படும் நமது முருகக்கடவுளுக்கும் உள்ள ஒற்றுமைகளை அடுத்த பதிவுகளில் காண்போம்.

புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்ற நூல்களில் காணப்படும் முருகன் குறித்த தரவுகள் மிகப்பழையது, ஆனால் பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கியங்களில் வரும் தரவுகள் இராமாயணம், மகாபாரதத்தில் வரும் முருகக்கடவுளில் உருவகத்தோடு ஒத்துவருகிறது.மகாபாரதத்தின் வனபர்வா, சல்யபர்வா, அனுசாசனபர்வா ஆகிய மூன்று பகுதிகளில் ஸ்கந்தனுடைய கதைகள் கூறப்பட்டுள்ளன. 

பகவத்கீதையில் கிருஷ்ணர் "ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த"என்று அருளியுள்ளார்.

பழந்தமிழகத்தில் முருகு, முருகன் என்ற இரு பெயர்களில் முருகர் வணங்கப்பட்டதை அறியமுடிகிறது. வேலன் என்பவர் முருகனின் பூசாரியாவார். மலையாளத்தில் இவரை வெளிச்சப்பாடு என்பர். 

"முருகமர்ந்து வந்த முதுவாய் வேல"

என குறுந்தொகையின் ஒரு பாடல் கூறுகிறது.அதாவது முருகன் என்ற தெய்வம் உள்ளே வர வெறியாடி வந்த வேலனே என்பது இதன் பொருள்.

தற்போது கூட நிறைய கிராமங்களில் இளம்பெண்களை பொழுதுமங்கிய வேலையான இருள் சூழ்ந்ந வேளைகளில் செல்ல வேண்டாம், பேய் பிடித்துவிடும் அல்லது முனிஅடித்துவிடும் என கூறுவதுண்டு. மேலும் சில பெண்களுக்கு பேய்பிடித்து(?)விட்டால் பூசாரியிடம் அழைத்து சென்று அப்பேயினை விரட்டிவிடுவதும் உண்டு. இதனையே அன்று சங்க இலக்கியமும் கூறுகிறது. காதல்நோய் பட்டபெண் பித்துபிடித்தார் போல இருக்கையில் அவளின் தாயும், தோழியும் வேலனிடம் அழைத்துசென்று ஆடறுத்து, அந்த இரத்தத்தை மேடையில் கிடத்தி அதன் மேல் வேலனை ஆடவைப்பர். அப்பொழுது அவனுள்ளே இறங்கும் கடவுளை "முருகு" என்கிறது இலக்கியம்.

முருகனை இன்று நாம் வணங்கும் கருப்பு, ஐயனாரை போல் மந்தையிலும், ஊர் எல்லையிலும் வைத்து உயிர்ப்பலியிட்டு வழிபட்டதே பெருவழக்காயிருந்தது. ஆயினும் ஒருசில இடங்களில் முருககோட்டம் (கோவில்) இருந்ததை புறநானூறு கூறுகிறது.

முருகனுக்கு வள்ளிமட்டுமே மனைவியாய் இருந்ததை பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து அறியலாம்.(முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல-நற்றிணை) பிற்காலத்திலேயே தெய்வானையும் இணைக்கப்படுகிறார்.

இவ்வாறு எளிய முறையில் குறிஞ்சிசார்ந்த திணையில் இருந்த முருகக்கடவுள், இன்றைய One india Scheme போல. இவரும் ஸ்கந்தன், கார்த்திகேயன் ஜோதியில் கலந்துவிடுகிறார்.

முருகன்-ஸ்கந்தன் தொடர்பை அடுத்த பதிவில் காண்போம்.

Tuesday, 27 October 2020

பெருமாளா? மலைக்காளியா? குமரனா?

 பெருமாளா? மலைக்காளியா? குமரனா?


"குமரி, வேங்கடம், குண, குடகடலா

மண்திணி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்"

-சிலப்பதிகாரம்



புடையல்அம் கழற்கால் புல்லி குன்றத்து

நடைஅரும் கானம் விலங்கி நொன்சிலைத்

தொடைஅமை பகழித் துவன்நிலை வடுகர்

பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்

மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் 

-அகநானூறு 



எனவே, வேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லை என்பதும் அம்மலைக்கு அப்பால் பிற மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பதை அறியலாம்.


திருப்பதிமலையிலுள்ள பெருமாளை நீண்ட நாட்களாகவே, அவர் பெருமாளல்ல, முருகப்பெருமான் என ஒரு வதந்தி கிளம்பியது. "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன்" இருப்பான் என்ற சொலவடையையும் உதாரணம் காட்டி வாதிட்டு வந்தனர்.

"மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூல்வேறு புதிதாக, அவர் பெருமாள் அல்ல, மலைக்காளியே என்ற புது கருத்தினையும் பதிவிட்டிருந்தார்.


திருப்பதியிலுள்ள மலைமக்கள் காளி சிலையை செய்து வழிட்டதாகவும், அதன்பின் சில பிராமணர்கள் அச்சிலையை சிவபெருமானாக்கி வழிபட்டதாகவும், அதன்பின் அம்மலைமக்களான அம்பட்டையர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மொட்டையடிக்கும் காணிக்கை அவர்களுக்கும், கோவிலுக்கு உள்ளே வரும் காணிக்கை பிராமணர்களுக்கு எனவும் முடிவெடுத்து அதன்படி வாழ்ந்ததாகவும், அதன்பின் ராமானுஜர் அங்குள்ள சைவர்களிடம் வாதிட்டு அச்சிலையை பெருமாளாக மாற்றினார் எனவும் எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி அவர் கருவறைக்குள்ளே சென்று பார்த்ததாகவும், அங்கு உள்ளே இருப்பது காளிதான் எனவும் எழுதியிருந்தார். இச்செய்தி பரவலாய் பரவி மேலும் அங்கிருப்பது பெருமாளில்லையோ என்ற அவதூறுவையும் கிளப்பியது. 

இவ்வளவு வதந்தியிற்கும் காரணம், உண்மைதகவலை சான்று பகிரும் அக்கோவிலின் கல்வெட்டுகள், பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என்பதே உண்மை. 

இரண்டாம் நந்திவர்மனின் 51 ம் ஆட்சியாண்டு (கி.பி.761) கல்வெட்டு இக்கோவிலை, திருவேங்கட கோட்டத்து குடவூர் நாட்டு திருச்சோகினூர், திருவேங்கட பெருமான் என இன்றைய வேங்கட பெருமாளை அழைக்கிறது. இதிலிருந்து மேற்கண்டவை அனைத்தும் புரளிகள் என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.மேலும் இக்கோவிலுக்கு பல்லவர் காலத்தில் இருக்கோவேள் மரபினன் "குணஅபராஜிதன்", சோழநாட்டு "உலகப் பெருமான்" என்போரும்,

சோழர்காலத்தில், ராஜராஜனின் பட்டத்து ராணியான தந்திசக்தி விடங்கியின், தந்தை(சக்திவிடங்கன்),தாய்(சாமை) போன்றோரும், சுந்தரசோழரின் மனைவியருள் ஒருவரான "பராந்தகதேவி அம்மன்" என்பவரும், இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் தானமளித்துள்ளனர். இதுதவிர பாண்டியர், யாதவராயர், பொத்தப்பிசோழர்கள், விஜயநகர அரசர்கள் நிறைய பொன்தானமும், விளக்குதானமும் அளித்துள்ளனர்.


எனவே வீண்புரளிகளை தவிர்த்து "பெருமாளையே" நாம் வணங்குவோம்.



விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி  : விநாயகர் தமிழ்க்கடவுளா? ஆரியக்கடவுளா? என்ற விவாதம் தாண்டி, இந்திய அளவில் விநாயகரின் முதல் உருவவழிபாடு நம் தமிழகத்தி...

Other posts in this topic