Monday, 12 April 2021

பரிபாடல் கால முருகன்

 பரிபாடல் கால முருகன்:


பரிபாடலுக்கு சிற்றெல்லை 25 அடியென்றும், பேரெல்லை 400 அடியென்றும் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் நமக்கு இன்று கிடைத்ததோ சிற்றெல்லை 32 அடியும், பேரெல்லை 140 அடியுமே, ஏனைய இழந்த பாடல்கள் எவ்வளவு தகவல் அளித்திருக்குமோ தெரியவில்லை.      


இது தொகுக்கப்பட்ட காலத்தில் 70 பாடல்களை உடையது என்பதை கீழ்க்கண்ட பாடல் தெரிவிக்கிறது.      


“திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்

தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய

வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்"


மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும் செழுமையும் தந்த வைகை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும்  மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது பரிபாடல்.

பரிபாடலில் முருகவழிபாடு பழங்குடியினர் மரபுவழிபாடும், வடஇந்திய ஸ்கந்தவழிபாடும் இணைந்த ஒரு கலவையாய் இருப்பதை நன்கு அறியலாம். எளிதாக சொல்லவேண்டுமானால், இன்றைய குலசேகரபட்டினம் சொர்ணமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் நாட்டார் தெய்வ வழிபாட்டினை கூறலாம். இந்த இருதெய்வமும் சிவபார்வதியின் அம்சமாய் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தலபுராணம் கூறுகிறது. தமிழகத்தில் பிறசிவன்கோவில்களை போல இங்கே ஆகமவிதிகளின்றி எளிய கட்டுமானத்தில் இத்தெய்வங்கள் உள்ளது. கிடாவெட்டு, வேடம்கட்டுதல், முளைப்பாரி, இன்னும் பல Tribal ritual இந்த கோவிலில் காணலாம். இந்த நிகழ்வையெல்லாம் தமிழக சிவாயங்கள் எங்கிலும் காண இயலாது. இதேபோன்ற ஒருமரபுதான் திரௌபதை-அரவான் கதையிலும், தொண்டைமண்டல 

கொற்றவை -அரிகண்ட வீரன் மரபே வில்லிபாரதம் உட்புகுதலுக்குபின் திரௌபதை வழிபாடாய் மாற்றம் கண்டது.


குறிஞ்சிமக்கள் வழிபாடு:


முருகனுக்குரிய மரமாய் கடம்பமரம் போற்றப்பட்டு அம்மரத்தினை சுற்றி குரவைகூத்து ஆடி, தொண்டகப்பறை போன்ற இன்னிசையெழுப்பி முருகனை வணங்கினர். மலைதெய்வமே முருகன் என்ற கருத்திற்கேற்ப குறவரின் வேட்டைகருவியான வேலும், குறிஞ்சிநிலத்தில் வாழும் வேளமும், மயிலும் முருகனுக்கு உரியவையாய் மாற்றப்பட்டது.


பரிபாடலில் முருகனுக்கு ஆறுமுகங்களும், பன்னிருகைகளும், காட்டப்படுகிது. மனிதஆற்றலைவிட உயர்ந்த ஆற்றல்கொண்டவர் என்பதனை உருவகப்படுத்த இவ்வாறு செய்துள்ளனர். பன்னிரு கைகளிலும் வெள்ளாட்டுமறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடரி, கணிச்சி, மழுப்படை, மாலை, மண் உள்ளது எனவும் பரிபாடல் கூறுகிறது.


மாமரவடிவில் கடலில் ஒளிந்த போர் செய்த சூரனை, வேரோடு அழித்து வதம் செய்தான் முருகன் என பரிபாடலில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.


இந்த புராணத்தின் தத்துவத்தை மானுடவியலாரின் பார்வையில் அடுத்து காண்போம்.




No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி  : விநாயகர் தமிழ்க்கடவுளா? ஆரியக்கடவுளா? என்ற விவாதம் தாண்டி, இந்திய அளவில் விநாயகரின் முதல் உருவவழிபாடு நம் தமிழகத்தி...

Other posts in this topic