Tuesday, 27 October 2020

பெருமாளா? மலைக்காளியா? குமரனா?

 பெருமாளா? மலைக்காளியா? குமரனா?


"குமரி, வேங்கடம், குண, குடகடலா

மண்திணி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்"

-சிலப்பதிகாரம்



புடையல்அம் கழற்கால் புல்லி குன்றத்து

நடைஅரும் கானம் விலங்கி நொன்சிலைத்

தொடைஅமை பகழித் துவன்நிலை வடுகர்

பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்

மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் 

-அகநானூறு 



எனவே, வேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லை என்பதும் அம்மலைக்கு அப்பால் பிற மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பதை அறியலாம்.


திருப்பதிமலையிலுள்ள பெருமாளை நீண்ட நாட்களாகவே, அவர் பெருமாளல்ல, முருகப்பெருமான் என ஒரு வதந்தி கிளம்பியது. "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன்" இருப்பான் என்ற சொலவடையையும் உதாரணம் காட்டி வாதிட்டு வந்தனர்.

"மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூல்வேறு புதிதாக, அவர் பெருமாள் அல்ல, மலைக்காளியே என்ற புது கருத்தினையும் பதிவிட்டிருந்தார்.


திருப்பதியிலுள்ள மலைமக்கள் காளி சிலையை செய்து வழிட்டதாகவும், அதன்பின் சில பிராமணர்கள் அச்சிலையை சிவபெருமானாக்கி வழிபட்டதாகவும், அதன்பின் அம்மலைமக்களான அம்பட்டையர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மொட்டையடிக்கும் காணிக்கை அவர்களுக்கும், கோவிலுக்கு உள்ளே வரும் காணிக்கை பிராமணர்களுக்கு எனவும் முடிவெடுத்து அதன்படி வாழ்ந்ததாகவும், அதன்பின் ராமானுஜர் அங்குள்ள சைவர்களிடம் வாதிட்டு அச்சிலையை பெருமாளாக மாற்றினார் எனவும் எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி அவர் கருவறைக்குள்ளே சென்று பார்த்ததாகவும், அங்கு உள்ளே இருப்பது காளிதான் எனவும் எழுதியிருந்தார். இச்செய்தி பரவலாய் பரவி மேலும் அங்கிருப்பது பெருமாளில்லையோ என்ற அவதூறுவையும் கிளப்பியது. 

இவ்வளவு வதந்தியிற்கும் காரணம், உண்மைதகவலை சான்று பகிரும் அக்கோவிலின் கல்வெட்டுகள், பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என்பதே உண்மை. 

இரண்டாம் நந்திவர்மனின் 51 ம் ஆட்சியாண்டு (கி.பி.761) கல்வெட்டு இக்கோவிலை, திருவேங்கட கோட்டத்து குடவூர் நாட்டு திருச்சோகினூர், திருவேங்கட பெருமான் என இன்றைய வேங்கட பெருமாளை அழைக்கிறது. இதிலிருந்து மேற்கண்டவை அனைத்தும் புரளிகள் என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.மேலும் இக்கோவிலுக்கு பல்லவர் காலத்தில் இருக்கோவேள் மரபினன் "குணஅபராஜிதன்", சோழநாட்டு "உலகப் பெருமான்" என்போரும்,

சோழர்காலத்தில், ராஜராஜனின் பட்டத்து ராணியான தந்திசக்தி விடங்கியின், தந்தை(சக்திவிடங்கன்),தாய்(சாமை) போன்றோரும், சுந்தரசோழரின் மனைவியருள் ஒருவரான "பராந்தகதேவி அம்மன்" என்பவரும், இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் தானமளித்துள்ளனர். இதுதவிர பாண்டியர், யாதவராயர், பொத்தப்பிசோழர்கள், விஜயநகர அரசர்கள் நிறைய பொன்தானமும், விளக்குதானமும் அளித்துள்ளனர்.


எனவே வீண்புரளிகளை தவிர்த்து "பெருமாளையே" நாம் வணங்குவோம்.



Friday, 17 July 2020

கணிச்சியோன்

கணிச்சியோன்:

சிவன் என்ற சொல்லோ சைவம் என்ற சொல்லோ சங்கப்பாடல்களில் எங்கும் கிடையாது. இதனால் இச்சமயம் சங்ககாலத்தில் இல்லையென கூற இயலாது, மாறாய் முக்கட்செல்வன், நீலமணிமிடற்றுஒருவன், கணிச்சியோன்,ஆதிரையன் என்ற சொற்கள் சிவனைக் குறிப்பதாய் கருதப்படுகிறது! சிவனின் தோற்ற அடையாளங்களையே சங்கப்பாடல்கள் கொண்டுள்ளன.

*செந்நிறத்தவன், செஞ்சடையன், அச்சடையையும் அவிழ்ந்து தொங்குவது(எரிமருள் அவிர் சடை)
*அவனது கழுத்து அழகானது(மணிமிடறு) கருநிறத்தது(நீலமணி மிடறு,கறைமிடறு)
*நெற்றியில் இமையாத முக்கண்ணை கொண்டதால் முக்கண்செல்வன் என அழைக்கப்பட்டார்
*ஆயுதமாய் கணிச்சியும், மழுவையும் ஏந்தியவர்(சூலம் சங்கப்பாடல்களில் இல்லை)

தலையிலும், மார்பிலும் கொன்றைமலர் சூடியவர். இவ்வாறு பூ அணிந்து போரிடும் குழுவினர்பற்றி சங்கப்பாடல்களில் நிறைய உண்டு. இது குழுக்களை அடையாளப்படுத்த உதவியது. (பணம்பூ சேரனுக்கும், ஆத்திப்பூ சோழனுக்கும், வேப்பந்தார் பாண்டினும், வெட்சிப்பூ ஆநிரை கவர்வோரும்,கரந்தைப்பூ ஆநிரை மீட்போரும், வெற்றிகொள்ளும்போது உழிஞைப்பூ அணிந்தும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.)

சங்கப்பாடல்களில் கணிச்சியோன் என்றபெயர் பல இடங்களில் வருகிறது. கணிச்சி என்பது சிவன் கையில் ஏந்தியுள்ள கருவி, இதன் சரியான வடிவம் சிற்பபுத்தகங்களில் இல்லை. சங்கப்பாடல்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும், "கையது கணிச்சியோடு மழுவே, மூவாய் வேலும் உண்டு" என்று கூறுகிறது. மூவாய் வேல் என்பது சூலாயுதத்தை குறிக்கும், வேறு எந்தப்பாடலிலும் சிவனுக்குரிய ஆயுதமாய் சூலத்தை கூறவில்லை.

கணிச்சி என்பது குழி தோண்டவும், பாறைகளை உடைக்கவும் பயண்பட்ட கருவியென தெரிகிறது. கணிச்சி (tonka) என்பதற்கு சிவனின் ஆயுதம் என்றும் உளி என்றும் சில நூல்கள் கூறுகிறது.
கிணறு அகழ்வோர் கூரான கணிச்சியை பயன்படுத்தியதாய் அகநானூற்றின் 21,399 ம் பாடல் கூறுகிறது! கற்கால ஆயுதங்களில் கல்கோடாரியும் முக்கியமான ஒன்று. கணிச்சி ஆயுதம் பூண்ட மற்றொருவனாய் கூற்றுவனை(எமன்)யும் அகம் கூறுகிறது! 

ஈர்ஞ்சடை அந்தணன், பிங்குநீர் சடைக்கரந்தான், அந்தணருக்கு அருமறை பகர்ந்தான் என்ற சொற்கள் வேதமுதன்மையை சைவம் ஏற்றுகொண்ட பின்னர் பொருந்திவரும் சிவனின் குணநலன்கள். ஆனால் இவையாவும் சங்கப்பாடல்களில் கூறப்படுவதற்கு நிறைய முரண்கள்உள்ளது.

தொல்காகாப்பியத்தில் திணைதெய்வங்களாய் வரும் இந்திரனும், வருணனும் சங்கப்பாடல்களில் இடம்பெறா தெய்வங்கள். தொல்காப்பியம் தொகைநூல்களுக்கு முந்தியவை என்றும் பிந்தியவை என்றும் இரு கருத்து உண்டு. இப்புதிர்களுக்கு விடை கிடைக்கும்போது மேலேயுள்ள முரணுக்கும் விடை கிடைக்கும்.

மேற்கோள்: செந்தீ நடராசன் ஐயா கட்டுரைகள்


முருகப்பெருமான்

எந்த வேல் வந்தாலும் கந்தவேலு முன்னாடி சரணம் சரணம்.🙏🙏🙏

முருகப்பெருமான் அசுரனை அழிக்க அன்னையிடம் வேலினைபெற்ற நிகழ்வுதான் தைப்பூசநாள் என புராணம் கூறுகிறது.

சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து”
என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முருகனின் ஆயுதமாக மட்டும் வேல் கருதப்பட்டிருக்குமாயின் அதற்கென தனி வழிபாட்டு மரபுகள் ஏற்பட்டிருக்க முடியாது . அதற்கு மேலும், அதாவது முருகனே வேலாக, வேலே முருகனாக எண்ணி வழிபடும் மரபு தோன்றிய போது தான் அதற்கென தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. சங்க காலம் தொட்டு வளர்ந்து வந்துள்ள இவ்வழிபாட்டு முறைகளை ஆராய்கின்றபோது சங்ககாலம் தொட்டு இன்று வரை மக்கள் வேலின் பால் தெய்வநம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளமையை உணரமுடிகின்றது.

வெறியயர்தல்:
சங்ககாலத்தில் `வேல்’ வழிபாட்டுச் சடங்குகள் `வெறியயர்தல்’ என்ற பெயரில் நிகழந்துள்ளன. அழகும் இளமையும் கொண்ட மகளிர் நலம் குன்றின காலத்து, அவர்களனி பெற்றோர் வேலனை வெறியாட அழைத்துள்ளனர் . இவ்வாறு அவன் வெறியாட அழைக்கப்படும் போது வேலன் கையில் வேல் கொண்டு வருகின்றான். வழிகள் சில சந்திக்கும் இடத்தில் வெய்மணலைப் பரப்பி, செந்நெல் வெண்பொறிகளைத் தூவி, பந்தர் அமைத்து, பூபல பெய்து, பசுந்தழை, காந்தள், பூக்குலைகளைச் சுற்றிக்கட்டி, வேலை மையமாக வேலன் நடுகின்றான். பிறகு முருகன் பெயரை வாழ்த்தி, முருகன் தம்மேல் எழுந்ததாகக் கொண்டு, வேல் எடுத்து ஆடுகின்றான். இவ்வாறு அவன் ஆடுகையில் மணிகள், இயம்பங்கள் ஒலிக்கின்றன. மகளிர் குறிஞ்சி பாட, தூபம் எங்கும் புகைகிறது.

இவ்வாறு முருகன் மற்றும் வேலின் தொடர்பை நாம் உணரலாம்.






பிடவூர் ஐய்யனார்

பிடவூர் ஐய்யனார்:

தமிழ்மக்களின் தொன்றுதொட்ட தெய்வம் சாத்தன், இவரை சாஸ்தா, ஐய்யனார் ஐயன் என பல பெயரில் அழைப்பதுண்டு. பல ஊர்களில் இவர் நீர்த்துறைகளில் காணப்படுவார். ஆனால் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் மட்டுமே தனியாய் கற்றளி எழுப்பி வணங்கும் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறெங்கும் இப்படி தனிப்பெருந்தெய்வமாய் கற்றளியில் இருப்பதில்லை. அதுவும் இக்கோவில் சோழர் காலத்து கற்றளி. இன்றைய திருப்பட்டூரே அன்று பிடவூர் என அழைக்கப்பட்டது. இதனை அக்கோவில் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். "புவனமுழுதுடைய வளநாட்டு திருப்பிடவூர் நாட்டு தேவதானம்" என்று பயின்று வருவதிலிருந்து இன்றைய திருப்பட்டூரே, பிடவூர் என உறுதியாய் கூலாம்.

பிடவூர் பற்றி சங்க இலக்கிய குறிப்புகள்:

புறநானூற்றின் 95ம் பாடலில்,

"செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிணேயேம் பெரும"

என பாட்டுடைத்தலைவனாய் சாத்தனார் என்பவரை கூறுகிறார். சோழநாட்டு பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவராவார். அப்பாட்டுடைத் தலைவனே தற்போது திருபட்டூரில் கோவில் கொண்டிருக்கும் சாத்தன் என டாக்டர்.உ.வே.சா கருதுகிறார்.
சாத்தனுக்கு கோவில் கட்டி வணங்கும் வழக்கம் இருந்தது, பெரியபுராணத்தின் 'வெள்ளானை சருக்கம்' வாயிலாய் அறியலாம். சிவபெருமான் திருஉலாவை மாசாத்தனார் கேட்டு, திருப்பிடவூரில் வெளிப்படுத்தினார் 52 ம் பாடல் கூறுகிறது. சுந்தரர் காலத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் முன்பு வாழ்ந்த மனிதர் 'பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன்' சுந்தரர் காலத்தில் அவர் தெய்வமாக்கப்பட்டிருக்கலாம். 

ஐய்யனார் தமிழகத்தின் தனிப்பெரும் நெறியாய் இருந்திருந்து, பின் இவரை வணங்கும் மக்களை தம்முள் இழுக்க சமணமும், பௌத்தமும், வைதீகமும் தத்தம் புராணத்திற்குள் இழுத்திருக்குமோ? என்றும் யோசிக்க வேண்டியுள்ளது(🏃🏃🏃🏃🏃)



விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி  : விநாயகர் தமிழ்க்கடவுளா? ஆரியக்கடவுளா? என்ற விவாதம் தாண்டி, இந்திய அளவில் விநாயகரின் முதல் உருவவழிபாடு நம் தமிழகத்தி...

Other posts in this topic